பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று (16.05.2018) மட்டும் மாணவர்களிடமிருந்து 10,462 அழைப்புகள் வந்தன என்று மாணவர்களுக்கான கல்வித் தகவல் மையம் தெரிவித்துள்ளது.


பள்ளி மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவதற்காகத் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பாக இலவச கல்வித் தகவல் மையம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அந்தக் கல்வி மையத்தைத் 14417 என்ற இலவச எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்துத் தெரிவித்த கல்வித் தகவல் மையத்தின் மேற்பார்வையாளர் ஃப்ரான்சிஸ், `தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் மார்ச் மாதத்தில் இந்தச் சேவை மையம் தொடங்கப்பட்டது.

மாணவர்கள், அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள், தேவைப்படும் ஆலோசனைகள் குறித்து தெரிந்துகொள்ள இந்தச் சேவை மையத்தைத் தொடர்புகொள்ளலாம். அவர்களுக்கு, தகுந்த ஆலோசனை சைக்காலஜி படித்த ஆலோசகர்கள் உள்ளனர். அவர்கள், தொலைபேசி வழியாக தேவையான விளக்கத்தை அளிப்பார்கள். இந்தச் சேவை 365 நாளும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான அன்று மட்டும் 10,462 அழைப்புகள் வந்தன். நகர்ப்புற மாணவர்களைவிட, கிராமப்புறத்திலிருந்துதான் அதிகமான அழைப்புகள் வந்தன' என்று தெரிவித்தார்.

நேற்று மாணவர்களின் அழைப்புகளைக் கையாண்ட அனுபவம் குறித்துத் தெரிவித்த கல்வித் தகவல் மையத்தில் பணியாற்றும் மாணவர்களுக்கான மனநல ஆலோசகர் கவிதா, `நேற்றைக்கு காலை 7 மணி முதலே மாணவர்களின் அழைப்புகள் வரத் தொடங்கின. அப்போது, பேசிய மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்பதுபோல அச்சத்துடன் பேசினார்கள். அவர்களுக்கு, தோல்விக்குப் பிறகு, இருக்கும் வாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். தேர்வு முடிவுகள் வந்த பின்பு அவர்களைத் தொடர்புகொண்டு அவர்களின் நிலைகளைத் தெரிந்துகொண்டோம். நல்லவேளையாக அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.

தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, வந்த அழைப்புகள் பெரும்பாலும் 700 - 800 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். அடுத்து எந்தப் படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனைகள் பெற்றனர். பி.காம் படிப்பு குறித்து மாணவர்கள் அதிகமாக ஆலோசனைகள் கேட்டனர். தேர்வில் தோல்வியடைந்த ஒருசில மாணவர்கள், பெற்றோர்கள் அடித்ததாகக் கூறினர். மகன் மதிப்பெண் குறைந்ததால் ஒரு குடும்பமே சாப்பிடாமல் சோகமாக இருந்தது. பின்னர், நாங்கள் வழங்கிய ஆலோசனைக்குப் பிறகுதான் ஆறுதல் அடைந்தனர். மதிப்பெண் குறைந்த, தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களை அரவணைக்க வேண்டிய பெற்றோர்களுக்கே அதிகளவு அறிவுரை செய்ய வேண்டியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுக்குப் பிறகு, படிப்பதற்கு ஏராளமான படிப்புகள் இருக்கின்றன. மாணவர்கள், பெற்றோர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.