ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் பதிவு வந்தாச்சு!


மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு துவங்கவுள்ளது.

மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.

ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறியதாவது: பிரத்யேக பயிற்சி பெற்ற 10 கணினி பயிற்றுனர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.

கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். இனி, ஆசிரியர், அலுவலர் தாமதமாக பணிக்கு வந்ததை ஏதாவது காரணத்தை கூறி 'சமாளிக்க' முடியாது என்றார்