பி.ஆர்க். படிப்புக்கான நுழைவுத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பி.ஆர்க். (இளநிலை கட்டடவியல் பொறியியல்) படிப்பில் சேருவதற்கான நாடா (தேசிய கட்டடவியல் திறனறித் தேர்வு) நுழைவுத் தேர்வுக்கு வியாழக்கிழமை (ஜன.24) முதல் விண்ணப்பிக்கலாம் என இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டுக்கான முதல் நாடா தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு வியாழக்கிழமை முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய மார்ச் 11 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஏப்ரல் 14 முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் மே 3 ஆம் தேதி வெளியிடப்படும்.
இரண்டாவது தேர்வானது ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கும் ஜனவரி 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தைப் பதிவு செய்ய ஜூன் 12 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை ஜூன் 24 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். தேர்வு முடிவுகள் ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்படும்.
தேர்வு மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர் ஆகிய 6 நகரங்களில் இந்தத் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கட்டணம்: தேர்வுக்கான கட்டணம் ரூ. 1,800. இரண்டு முறையும் தேர்வெழுத விரும்புபவர்கள் ரூ. 3,500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 1,500 செலுத்தினால் போதுமானது. இரண்டு முறையும் எழுத விரும்பும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ. 2,800 செலுத்தவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.nata.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்
0 Comments