ஏப்ரல் மற்றும் ஜூலையில் 'நாட்டா' நுழைவு தேர்வு


பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' நுழைவு தேர்வு, ஏப்ரல் மற்றும் ஜூலையில் நடக்கும் என, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், கட்டடவியல் படிப்பான, பி.ஆர்க்.,கில் சேர, தேசிய அளவிலான, நாட்டா நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் சார்பில், நாடு முழுவதும், இந்த தேர்வு நடத்தப்படுகிறது.


ஆண்டுதோறும், ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், சில முக்கிய மையங்களில், குறிப்பிட்ட தேதிகளில், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வு முடிந்ததும், இரண்டு மணி நேரத்தில், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதிகபட்சம், ஐந்து முறை ஆன்லைன் தேர்வில் பங்கேற்கவும், இவற்றில் பெறும் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை பெறவும், வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், இந்த தேர்வு முறையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன. 

இதையடுத்து, ஆன்லைன் தேர்வு முறை மாற்றப்பட்டு, தேசிய அளவில் எழுத்து தேர்வு நடத்தப்படும் என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது. 'நடப்பு கல்வி ஆண்டுக்கான, நாட்டா தேர்வு, இரண்டு முறை நடத்தப்படும்' என, இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.இதன்படி, முதல் தேர்வு, ஏப்., 14; இரண்டாம் தேர்வு, ஜூலை, 7ல் நடத்தப்படுகிறது. இரண்டு தேர்வுகளுக்கும், ஜன., 24ல் ஆன்லைன் பதிவுகள் துவங்குகின்றன. முதல் தேர்வுக்கு, மார்ச், 3; இரண்டாம் தேர்வுக்கு, ஜூன், 12ல் பதிவுகள் முடிகின்றன. இதற்கான விபரங்களை, www.nata.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.