அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் பணி ஒதுக்கீடுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு


அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பணி ஒதுக்கீட்டுக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளி கல்வி துறையின் தரத்தை உயர்த்துவதற்கு, பல்வேறு சீர்திருத்த பணிகளை, பள்ளி கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மாநிலம் முழுவதும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை நடத்துவதற்கு, நடவடிக்கை துவங்கியுள்ளது.இதற்காக, அரசு தொடக்க பள்ளிகளுக்கு அருகில் உள்ள, அங்கன்வாடி மையங்கள், தேர்வு செய்யப்பட்டு உள்ளன. 

மாநிலம் முழுவதும், 2,381 இடங்களில், கே.ஜி., வகுப்புகளை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கு, அரசு தொடக்க பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியைகள், பணி ஒதுக்கீடு செய்யப்படுகின்றனர்.ஆசிரியை இல்லாத இடத்தில், ஆசிரியர்களை நியமிக்கவும், அவர்கள், தினமும் இரண்டு மணி நேரம், அங்கன்வாடிகளுக்கு சென்று, கே.ஜி., வகுப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதற்கான பணி ஒதுக்கீட்டு ஆணை, மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.ஆனால், உத்தரவை பெற, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 5 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை, அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் நடத்த சொல்வதா என, ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே, பணி ஒதுக்கீட்டு ஆணையை பெற வேண்டாம் என, ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால், கே.ஜி., வகுப்புகள் துவங்கும் திட்டத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.