CBSE - 10ம் வகுப்பு கணிதத் தேர்வில் வருகிறது உங்களுக்கான மாற்றம்!
2020ம் ஆண்டு முதல் 10ம் வகுப்புக்கான கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது கணிதப் பாடத்துக்கு ஒரே ஒரு தேர்வு நடைபெறும் நிலையில், 2020ம் ஆண்டு முதல் இரண்டு நிலைகளில் கணிதத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது இருக்கும் கணிதப் பாடத்துக்கான தேர்வு அப்படியே நடத்தப்படும். அதனுடன் எளிதான கணிதப் பாடமும், அதற்கான தேர்வும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தற்போது உள்ள கணிதப் பாடம் கணிதம் - ஸ்டேன்டர்ட் என்றும், புதிதாக அறிமுகப்படுத்த உள்ள கணிதப் பாடம் கணிதம் - அடிப்படை என்றும் அழைக்கப்படும்.
கணிதத்தில் பலவீனமாக இருப்பவர்களும், கணிதப் பாடத்தை மேற்படிப்பில் படிக்க விரும்பாதவர்களும் கணிதம் - அடிப்படை என்ற தேர்வை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
பாடத்திட்டம், வகுப்பறை, மதிப்பெண் வழங்கும் முறை ஆகியவை ஒன்றுபோலவே இருக்கும். ஒரு மாணவர் தனது கல்வித் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஓராண்டு முழுவதும் தான் படிக்கும் கணிதப் பாடத்தை முன்கூட்டியே தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அதே சமயம், கணிதம் - அடிப்படையை எடுத்து 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களால் உயர்கல்வியில் கணிதப் பாடத்தை படித்தவர்கள் தேர்வு செய்யும் படிப்புகளில் சேர முடியாது. உயர்கல்வியில் கணிதத்தை எடுத்து படிக்க வேண்டும் என்றால், அந்த மாணவர் 10ம் வகுப்பில் கணிதம் - ஸ்டேண்டர்ட் பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, ஒரு மாணவர் எந்த கணிதத்தில் தேர்வெழுத விரும்புகிறார் என்பதை பொதுத் தேர்வுக்கு முன்பு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகிறது என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
0 Comments