Jactto-Geo : அரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! - முழு விவரம்


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், ஒன்பது நாட்களாக நடத்திய வேலைநிறுத்தம், நேற்று வாபஸ் பெறப்பட்டது. 'இது, தற்காலிக முடிவு தான்' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 22 முதல், ஒன்பது நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டது. அதேநேரம், சாலை மறியலில் ஈடுபட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தை முறியடிக்கும் வகையில், 'ஜன., 25க்குள், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவித்தனர். இதை ஏற்று, ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர்.

பின், இந்த அவகாசம், 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது, 70 சதவீத ஆசிரியர்கள், பணிக்கு திரும்பினர். மீத முள்ளோருக்கு, நேற்று முன்தினம் இரவு வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 29ம் தேதி, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பினர். அதேபோல், மாணவர், பெற்றோர், அரசியல் கட்சியினர் மத்தியிலும், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சமூக வலைதளங்களில், ஆசிரியர்களுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. இறுதியாக, போராட்டத்தை துாண்டிவிடும் நிர்வாகிகள் குறித்து, அரசு பட்டியல் எடுக்க துவங்கியது. இந்நிலையில், 'மாணவர் நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தினர். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றமும், பணிக்கு திரும்ப அறிவுறுத்தியது.ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மீனாட்சிசுந்தரம், கே.பி.ஓ.சுரேஷ், தியாகராஜன், அன்பரசு, வின்ஸ்டன் பால்ராஜ், சங்கரநாராயணன்
பங்கேற்றனர்.அதில், ஒன்பது நாட்கள் நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெறுவது என, முடிவு எடுக்கப்பட்டது.

சம்பளம் இன்று கிடைக்காது

போராட்டத்தில் பங்கேற்றோர், வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளத்தை பிடித்தம் செய்ய, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால், கருவூல துறையில் உள்ள சிலர், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் சேர்த்து, ஊதிய பட்டியலை அங்கீகரித்தனர்.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை
அடுத்து, தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலர், ஜவஹர், 'வேலை செய்யாத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இதையடுத்து,அனைத்து கருவூல அதிகாரிகளும், தாங்கள் ஏற்கனவே அனுமதித்த ஊதிய பட்டியலை, அந்தந்த துறை தலைவருக்கு அனுப்பி, அவற்றை சரிசெய்து தர அறிவுறுத்தினர். ஆனால், அதற்குள் ஊதிய பட்டியல், வங்கிகளின் பண பட்டுவாடா பிரிவுக்கு சென்றது.இது குறித்து, தகவல் அறிந்ததும், தமிழக அரசின் கருவூல துறை சார்பில், வங்கிக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதில், பண பட்டுவாடாவை நிறுத்த வேண்டும் என்றும், புதிய பட்டியல் வழங்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம், இன்று கிடைக்க வாய்ப்பில்லை. சம்பள பிடித்தத்துடன், அடுத்த வாரம் தான், இந்த மாதத்திற்கான சம்பளம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுக்கு வெற்றி

போராட்டத்தை துவக்குவதற்கு முன்னரே, 'நிதி நிலைமை சரி இல்லாததால், உங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, போராட்டம் வேண்டாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டது.

அரசை பணிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கின. அதற்கு, சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை.போராட்டத்திற்கு எதிரான மன நிலையில், மக்கள் இருப்பதை அறிந்து, அரசு, தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததுடன், போராட்டத்தை ஒடுக்கும் பணியை துவக்கியது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர், அரசின் கெடுபிடியால், பணிக்கு திரும்பினர்; போராட்டம் பிசுபிசுத்தது. வேறு வழியின்றி, போராட்டத்தை சங்கங்கள் வாபஸ் பெற்றன.இது, அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதேநேரம், போராட்டம் நடக்கும்போதே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நடவடிக்கைக்கு பயந்து, பணிக்கு திரும்பியது, சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் பிசுபிசுப்பு

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான, தமிழ்நாடு
தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை, நேற்று ஒரு நாள், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.அதை ஒடுக்க, ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், ஏழு பேர், நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.


அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அரசு தரப்பில், பகல், 12:00 மணிக்கு, 91 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.


போராட்டம் வாபஸ் ஏன்?

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், வின்ஸ்டன் பால்ராஜ் அளித்த பேட்டி:

எங்களின், 9 அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, எங்களை அழைத்து பேச வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை அழைத்து பேசவில்லை. முதல்வரின் வேண்டுகோள், பெற்றோரின் மன உணர்வுகள், ஏழை மாணவர் களின் கல்வி நலன் மற்றும் கட்சி தலைவர் களின் வேண்டுகோளை ஏற்று, போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.

இன்று முதல், அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மீண்டும் பணிக்கு செல்ல உள்ளோம். ஆசிரியர்கள் மீதான, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், கைதானோரை விடுதலை செய்து, வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

எங்களுடன் இணைந்த எந்த ஆசிரியருக்கும், சிறுகீறல் கூட இல்லாமல் பார்த்து கொண் டோம். எனவே, போராட்டத்தில் பங்கேற்ற, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து துணை நிற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒருநாள் போராட்டம் இல்லை

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதை ஒடுக்க ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் ஏழு பேர் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.காலை, 10 மணிக்கு முன்னதாகவே ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.காலை, 11 மணிக்கு முதல்வர் தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யில் அனைவரும் பங்கேற்றனர்.

அரசு தரப்பில் பகல் 12:00 மணிக்கு 91 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தொடர் போராட்டத்தை கைவிடுவ தாக அறிவித்தன.