Jactto-Geo : போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
இது குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்றால், விரைவில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது பெற்றோரின் மன உணர்வைக் கருத்தில் கொண்டும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எங்களை அழைத்துப் பேசவில்லை. கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், காவல்துறையினர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், முதல்வர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஏன் எங்களை அழைத்துப் பேச முதல்வர் மறுக்கிறார்? எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன முட்டுக்கட்டை இருக்கிறது என்று நீதிபதிகள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தைத் திரும்ப பெறுகிறோம். நாளை முதல் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.
0 Comments