விழுப்புரம் மாணவிக்கு விருது, ரூ.7 லட்சம் பணமுடிப்பு
கேரள வெள்ள நிவாரணத்துக்கு தனது உண்டியல் சேமிப்புப் பணத்தை வழங்கிய விழுப்புரம் பள்ளிச் சிறுமிக்கு, தைவான் நாட்டு பொது நல அமைப்பு சார்பில் விருதும், ரூ.7 லட்சம் பண முடிப்பும் வழங்கப்பட்டது.
கேரளத்தில் கடந்தாண்டு பெய்த பலத்த மழை, வெள்ளப் பாதிப்பில் ஏராளமான மக்கள் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர். பல்வேறு மாநிலங்களிலிருந்தும், அரசு உள்ளிட்ட பல்வேஹறு தரப்பினர் உதவிகளை வழங்கினர்.
அந்த நேரத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த கே.சிவசண்முகநாதன்-லலிதா தம்பதியரின் மகளும், தூய இருதய ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் 2-ஆம் வகுப்பு மாணவியுமான அனுப்பிரியா, தான் சைக்கிள் வாங்குவதற்காக உண்டியல்களில் கடந்த 3 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரம் தொகையை, கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இந்த பள்ளிச் சிறுமியின் சேவையை ஊக்கப்படுத்தும் வகையில், ஹீரோ சைக்கிள் நிறுவனம் சைக்கிளை வழங்கியது.
இந்த நிலையில், தைவான் நாட்டில் இயங்கி வரும், சுப்ரீம் மாஸ்டர் சிங் ஹைய் என்ற பொது நல அமைப்பு, உலகளவில் சேவை புரிந்து வருவோரைக் கண்டறிந்து, ஆண்டு தோறும் விருதுகளையும், பணமுடிப்பையும் வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த வகையில், அந்த அமைப்பு, விழுப்புரம் சிறுமி அனுப்பிரியாவை தாமாக தேர்வு செய்து, 2018-ஆம் ஆண்டுக்கான விருதை வழங்கியதுடன், ரூ.7 லட்சம் நிதியையும் வழங்கிப் பாராட்டியுள்ளது.
இதற்கான விழா விழுப்புரம் தூய இருதய ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தைவான் நாட்டு பொது நல அமைப்பின் நிர்வாக இயக்குநர் பிபின் தோசனி, திராஜ்லால்ராதாதியா, நாமதா, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி ஆகியோர் பங்கேற்று, மாணவிக்கு விருது, ரூ.7 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினர்.
விழாவில், கார்மேல் சபை மாநில தலைவி அருள்சகோதரி ஜோதி, பள்ளி நிர்வாகிகள் அருள்சகோதரி பவுலின், பாலின், பள்ளி முதல்வர் மங்கலம், ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தமிழக பள்ளி கல்வித் துறை சார்பில், தேர்வு செய்யப்பட்டு, பின்லாந்து, ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற கலை அறிவியல் ஆய்வுகளில் பங்கேற்றுத் திரும்பிய, தூய இருதய ஆங்கிலோ இந்தியன் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர் கிருத்திக் ஈஸ்வரையும் பாராட்டி கௌரவித்தனர்
0 Comments