814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்



அரசு பள்ளிகளில், 814 கணினி ஆசிரியர்களை நியமிக்கும் பணியை துவங்கும்படி, ஆசிரியரின் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, தமிழக பள்ளி கல்வி துறை கடிதம் அனுப்பியுள்ளது.  தமிழகத்தில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளிகளில், 1998ல், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' பாட பிரிவு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாடங்களை நடத்த, முதலில், 'டிப்ளமோ - கம்ப்யூட்டர் சயின்ஸ்' படிப்பை முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். 

இதையடுத்து, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.எட்., முடித்த பட்டதாரிகள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.  தற்போது, 2,500 பேர் பணியாற்றும் நிலையில், காலியாக உள்ள, 814 இடங்களுக்கு, புதிய ஆசிரியர்களை நியமிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்து உள்ளது.  இதற்கு, எம்.எஸ்சி., முதுநிலை படிப்புடன், பி.எட்., படிப்பு முடித்தவர்களை மட்டுமே நியமிக்க, முடிவு செய்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், டி.ஆர்.பி.,க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  அதில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர் பணியிடத்தில், 814 காலி இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்வி துறையின், புதிய அரசாணையின் படி, தேர்வு நடத்தி, நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.