ஆசிரியர் பணிக்கான தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்!


 தேர்ச்சி பெற்ற இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

 நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 7 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வித்துறையில் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத இடங்களில் 93 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும், கள்ளர் சீரமைப்பு பள்ளியில் எஸ்.சி, அருந்ததியர் பிரிவில் 19 பணியிடங்களையும் நிரப்பவுள்ளதாக அறிவித்தது. அதேபோல் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத 12 இடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வும் நடத்தப்படவுள்ளதாக கூறியது.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் பாடவாரியான காலிப்பணியிடங்களின் விபரம், விண்ணப்பிக்கும் தேதி, தேர்வு நடைபெறும் தேதி ஆகியவை தனியாக அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் தேர்விற்கு விண்ணப்பம் செய்வது குறித்து தெரியாமல் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை 149-ன் படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி ஆசிரியர் தேர்வு வாரியமானது கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கும், பழங்குடியினர் வகுப்பிற்கான நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தகுதிப்பெற்ற தேர்வர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால் அவர்களுக்கு நடத்தப்படும் போட்டி எழுத்து தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.