இன்ஜி., கல்லுாரிகளின் அங்கீகாரம் அண்ணா பல்கலை ஆய்வு துவக்கம்
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கு, அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக, அண்ணா பல்கலை சார்பில் ஆய்வு பணி துவங்கிஉள்ளது. இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., சார்பில் அங்கீகாரம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தை பெற்று, கவுன்சிலிங் வழியாக மாணவர்களை சேர்க்கின்றன. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இன்ஜி., கல்லுாரிகள், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்தை புதுப்பிக்க வேண்டும். அந்த வகையில், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் பெற, ஏ.ஐ.சி.டி.இ.,யிடம் விண்ணப்பித்துள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், அண்ணா பல்கலை குழு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை மற்றும் ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகள் இணைந்த குழு, நேரடியாக, இன்ஜி., கல்லுாரி வளாகங்களுக்கு சென்று, ஆய்வை நடத்த உள்ளனர். இதற்கான குழுக்கள், அண்ணா பல்கலையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளன. கல்லுாரி வளாகங்களின் பரப்பளவு, ஆய்வக வசதிகள், நுாலக வசதிகள், சரியான கல்வி தகுதியுள்ள பேராசிரியர்கள் நியமனம், விடுதிகளின் வசதி, வளாகங்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, இந்த குழு ஆய்வு நடத்தும்.ஒவ்வொரு கல்லுாரியும் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் கூறியுள்ள தகவல்கள், உண்மையில் இருக்கிறதா, மாணவர்களிடம் குறை கேட்கப்படுகிறதா, கட்டட அனுமதி பெறப்பட்டுள்ளதா, கட்டடங்கள் ஸ்திரத்தன்மையுடன் உள்ளனவா என, விசாரிக்கவும், இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுவினர், எந்த முறைகேடும் இல்லாமல், கல்லுாரிகளின் வசதிகளை அறிந்து அறிக்கை தர, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது.
0 Comments