அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள்



அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறும்படி முதல்வருக்கு 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு வேண்டு கோள் விடுத்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' நிர்வாகிகள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணாவை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தும் மனு கொடுத்துள்ளனர்.மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:முதல்வரின் வேண்டுகேளை ஏற்றும் எதிர் காலத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையிலும் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றோம்.பின் பணிக்கு சென்ற போது அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். 

பணிக்கு சென்ற ஆசிரியர்களை வேறு பள்ளியில் சேரும்படி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருப்பதால் பணியில் சேர மறுக்கும் நிலை உள்ளது.தற்காலிக பணி நீக்கம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறி பணி வழங்க மறுக்கும் நிலை உள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும். மாறுதல் பணியிட உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் அதை திரும்பப் பெற வேண்டும்.வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும். அரசு ஊழியர்கள் மற்றும் அரசுக்கு உள்ள உறவினை சுமூகமாக்கி பணித்திறன் மேம்பட உதவ வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.