இன்ஜி., கவுன்சிலிங் விரைவில் ஆலோசனை



இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து ஆலோசிக்க, ஒருங்கிணைப்பு கூட்டத்தை, அடுத்த மாதம் நடத்த, உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 500க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளுக்கு, இந்த கவுன்சிலிங் வாயிலாக மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், இரண்டு லட்சம் வரையிலான இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் பட்டியலிடப்படும். அவற்றில், மாணவர்களின் மதிப்பெண், ஜாதி வாரியான இட ஒதுக்கீடு அடிப்படையில், இடங்கள் ஒதுக்கப்படும். ஆரம்பத்தில், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங், சென்னையில், ஒற்றை சாளர முறையில் நடத்தப்பட்டு வந்தது.பின், கவுன்சிலிங்கை எளிதாக்கும் வகையில், இரு ஆண்டுகளுக்கு முன், 'ஆன்லைன்' கவுன்சிலிங்காக மாற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு இருந்த நிலையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், கவுன்சிலிங்குக்கு பதிவு செய்யும் முறையும், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, அடுத்த கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங்கை நடத்துவது குறித்து, தமிழக அரசின் ஒருங்கிணைப்பு குழு, முதல் கட்டமாக விவாதிக்க உள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தர், சுரப்பா தலைமையில், உயர்கல்வி செயலர், மங்கத்ராம் சர்மா, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கமிஷனர், விவேகானந்தன், உறுப்பினர் செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், மார்ச்சில் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கான, முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன.