பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி: பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்


பள்ளி-கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்க்க, பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:-

தமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல், நூலகத்தின் பயன்பாட்டை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு ஆகியவற்றை வளர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக, தமிழக அரசுக்கும், சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.