தலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும் - புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு
புதுக்கோட்டை, பிப்.25: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு மேம்படுத்துதல் பயிற்சி அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி இரா.வனஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பயிற்சியினை தலைமையேற்று தொடங்கி வைத்துப் பேசியதாவது: தலைமையாசிரியர்கள் நேரமேலாண்மையைப் பின்பற்ற வேண்டும்.அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.புதிய பாடத்திட்டத்தை பற்றியும்,புதிய பாட அணுகுமுறையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.பள்ளிகளின் வரவு,செலவு திட்டங்கள் ,பள்ளி வளர்ச்சித்திட்டம் தயாரித்து அதனைப் பின்பற்ற வேண்டும்.ஆன்லைனில் வருகைப் பதிவினை சரியான நேரத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இங்கு ஐந்து நாட்களும் தொலைநோக்கு இலக்கு அமைத்தல்,பிரச்சினைகளைத் தீர்த்தலும் முடிவெடுத்தலும்,தனியாள் உறவு மற்றும் தகவல் தொடர்பு,மன அழுத்த மேலாண்மை,பணி அர்ப்பணிப்பு மற்றும் மனப்பாங்கு மாற்றம்,குரு உருவாக்குதல் போன்ற தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் அடுத்த கல்வி ஆண்டில் மிகச் சிறந்த பள்ளிகளாக தங்களது பள்ளிகளை மாற்றி இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பயிற்சிக்கு வந்திருந்த அனைவரையும் உதவி திட்ட அலுவலர் இரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பயிற்சியின் கருத்தாளர்களாக செங்கோல்ராஜ்,திருமால் பாண்டியன்,சிவகாமி,காந்திமதி ,கற்பகம் ,உளவியல் நிபுணர் நிர்மல்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.பயிற்சியில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் இருந்து 120 தொடக்க,நடுநிலைப் பள்ளி தலைமையாசியர்கள் கலந்து கொண்டனர்.
பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை செய்து இருந்தார்.
0 Comments