எப்படி பாஸ் பண்ண போறோம்னு தெரியல' - புதிய மதிப்பெண் முறையிலான வினாத்தாளால்புலம்பும் மாணவிகள்!


பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பள்ளிக் கல்வித்துறை தேர்வுக்கான புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாளை மாற்றி அமைத்ததைக் கண்டித்து புதுக்கோட்டை இராணியர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், புதுக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி நடைபெறுகிறது.இதற்காக, மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர். கடந்த அரையாண்டு, காலாண்டு மாதிரி வினாத்தாள்களைக் கொண்டு, தேர்வுக்குத் தயாராகி வந்தனர்.ஆனால், தற்போது, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பிளஸ்2 பொதுத் தேர்வுக்கு புதிய மதிப்பெண் முறையில் வினாத்தாள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான புதிய வடிவமைப்பில் மாதிரி வினாத்தாளை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது குறித்து மாதிரி வினாத்தாள் பார்த்து அறிந்த புதுக்கோட்டை இராணியர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் புதிய பேருந்து நிலையம் அருகே பள்ளிக் கல்வித்துறையைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சித்தலைவர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை மாணவிகள் முன்வைத்தனர்.

இந்த நிலையில் தான் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு மாணவிகள் உடன்படவில்லை. இதைத் தொடர்ந்து, போலீஸார் மாணவிகளுடன்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

உங்களது கோரிக்கைகளை பள்ளியில் வைத்துத் தெரிவியுங்கள் பொதுமக்களுக்கு இடையூறாகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேசினோம், 'காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள், பழைய மாதிரி வினாத்தாள்களை வைத்தே தேர்வுக்கு தயாராகி வந்தோம்.

பொதுத்தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், புதிய மதிப்பெண் முறையிலான வினாத்தாளில் தான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது என்ன நியாயம்.

இது எங்களுக்கு அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு எப்படித் தேர்வு எழுதித் தேர்ச்சிபெறப்போகிறோம் என்றே தெரியவில்லை" என்று புலம்புகின்றனர்.