School Morning Prayer Activities - 15th February 2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: - 15th February 2019
திருக்குறள் : 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
உரை:
ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
பழமொழி:
If you can not bite,never show your teeth
போகாத ஊருக்கு வழி தேடாதே
பொன்மொழி:
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
-நியேட்சே
இரண்டொழுக்க பண்பாடு :
1) எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.
2) பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.
பொது அறிவு :
1) பிரமிடுகளின் பிறப்பிடம் எது ? எகிப்து.
2) வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது ? அரியானா
நீதிக்கதை : தன்னலமற்ற தலைவன்
முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.
சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.
பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.
அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.
இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.
மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே! என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.
காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.
அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், "அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?" என்று கேட்டான்.
கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, "ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!"
இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,"என்றான் அரசன்.
"நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?" என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.
"தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!" என்றான் அரசன்.
நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, "மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது," என்றாள் கிழவி.
"தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!" என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்
இன்றைய செய்தி துளிகள் :
1) ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் பிளாஸ்டிக் அபராதம் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
2) தமிழக அரசின் 2 ஆண்டுகள் சாதனை மலரை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார்
3) இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை
4) தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்: சென்னை வானிலை மையம்
5) மகளிர் கால்பந்து மியான்மரிடம் தோற்றது இந்தியா
0 Comments