School Morning Prayer Activities - 22nd February 2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 22nd February 2019
திருக்குறள் : 136
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
உரை:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.
பழமொழி:
Justice delayed is justice denied
தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்
பொன்மொழி:
மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
- வள்ளலார்
இரண்டொழுக்க பண்பாடு :
1) விவசாயம் உலகின் அச்சாணி என்பதை நான் புரிந்து கொண்டேன். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் மதித்து நடப்பேன்.
2) என் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விவசாய பொருட்களை பேரம் பேசாமல் வாங்க வலியுறுத்துவேன்.
பொது அறிவு :
1) சில்வர் ஸ்டார் என்பது எந்த நாட்டின் உயர்ந்த விருது ?
ஜப்பான்
2) இந்தியாவிற்க்கும் சீனாவிற்க்கும் இடையே உள்ள எல்லைக்கோட்டின் பெயர் ?
மக்கோகன் எல்லைக்கோடு
நீதிக்கதை :
மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.
அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது. மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.
வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.
ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.
இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.
சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன. போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.
சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது. காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.
ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.
நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.
வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார்.
பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார். பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார்.
"என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்….." என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.
அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.
தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.
"அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்" என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.
"என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.
அடுத்து காகம் வந்தது…. பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்….வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.
மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?
மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?
என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார்.
அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின. கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின. நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.
"காட்டரசர் நாமம் வாழ்க" என்று பேச ஆரம்பித்தார் நரியார்.
"பன்றியார் சொன்னது போல்….. அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்…. பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்"
நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.
"காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்" என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.
"சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?" என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார்.
யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.
"பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்" கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார். இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி.
மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.
"காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்" என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.
இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.
சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.
ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.
இன்றைய செய்தி துளிகள் :
1) 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
2) அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம்
3) எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு
4) தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிதம் 8.55%லிருந்து 8.65%ஆக உயர்வு
5) உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு தடைவிதிக்க கோரி திட்டம்
0 Comments