தேர்தலையொட்டி அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் 12ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழ்நிலையில், ஏப்ரல்12ம் தேதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல, தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக, அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மற்ற வகுப்புகளுக்கு 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என்றும், அதற்கான கால அட்டவணையை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் வேலை நாட்கள் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடு செய்யுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 2018-19ம் கல்வியாண்டில் ஏப்ரல் 12ம் தேதியே கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
0 Comments