ஜே.இ.இ., தேர்வு தேதி மாறுமா?
லோக்சபா தேர்தல் காரணமாக இன்ஜினியரிங் படிப்புக்கான ஜே.இ.இ., நுழைவு தேர்வு தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் படிப்பை முடித்ததும் இன்ஜினியரிங் படிப்பில் சேர முற்படுவர். மத்திய அரசின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில் பி.டெக்., படிப்பில் சேர ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஜே.இ.இ., நுழைவு தேர்வு ஏற்கனவே ஜனவரியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தேர்வு ஏப்., 7 முதல், 20க்குள் நடத்தப்படும் என பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஏப்., 11, ஏப்., 18ல், பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. தமிழகம், புதுவையில், ஏப்., 18ல், பொதுத் தேர்தல் நடக்கிறது. ஏப்., 11 தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், தேர்வு மையம் அமைத்தல் பாதுகாப்பு மின்னணு ஓட்டு இயந்திர சோதனை போன்ற காரணங்களால் ஏப்., 7ம் தேதியே, கல்லுாரி, பள்ளிகள், தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் சென்று விடும்.
இந்த காலகட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில் நுழைவு தேர்வுக்கு மையங்கள் அமைக்க முடியாது. எனவே, ஜே.இ.இ., தேர்வை, ஏப்., 7க்கு முன் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தேசிய தேர்வு முகமை, இந்த பிரச்னை குறித்து, விரைவில் ஆய்வு செய்து, தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என, மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
0 Comments