விடைத்தாள் திருத்துதலில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு - அரசு தேர்வுத் துறை எச்சரிக்கை!



பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளையுடன் (மார்ச்19) முடிவடைகின்றன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 29-ல் தொடங்கி ஏப்ரல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கான விதிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆசிரியர்கள் காலை 8.30 மணிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு மையத்துக்கு வர வேண்டும். சிவப்பு நிற மைபேனாவை மட்டுமே மதிப்பீட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மதிப்பீட்டுப் பணிக்கு முன்னர் விடைத்தாள்களின் எண்ணிக்கை சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் ஏற்படும் குறைபாடுகளை முதன்மைத் தேர்வாளர்களின் கவனத்துக்கு கொண்டு வராவிட்டால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும். விடைக்குறிப்பின் அடிப்படையில் விடைத்தாள் திருத்த வேண்டும்.

தேர்வுத் துறை முத்திரை

அனைத்துப் பக்கங்களிலும் உள்ள அனைத்து விடைகளும் எதுவும் விடுபடாமல் முழுவதும் சரியாக திருத்தப்பட வேண்டும். தேர்வர் விடைஎழுதிய கடைசி வரியின் கீழ் தேர்வுத்துறை முத்திரை உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே ஆசிரியர் மதிப்பீட்டுப் பணியை மேற்கொள்ள வேண்டும்.

மதிப்பெண்ணை முதல்பக்கத்தில் அதற்குரிய கட்டத்துக்குள் தெளிவாக எழுத வேண்டும். ஆசிரியர் செய்யும் தவறுகள் விடைத்தாள் நகல்பெறுதல், மறுகூட்டலின்போது கண்டுபிடிக்கப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கைக்கு எடுக்கப் படும்’’என்று கூறப்பட்டுள்ளது.