போலி வினாத்தாள், 'லீக்' போலீசில், சி.பி.எஸ்.இ., புகார்



போலியான வினா தாளை, 'லீக்' செய்து குழப்பும் இணையதளங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசிடம் சி.பி.எஸ்.இ., புகார் அளித்துள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பு:

பிளஸ் 2 மற்றும் 10ம்வகுப்பு பொது தேர்வுகள் பிப்., 15ல் துவங்கின. இதுவரை 167 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த முறைகேடுகளும் இன்றி தேர்வுகள் முடிந்துள்ளன.  ஆனால், மாணவர்களையும் பெற்றோரையும் குழப்பும் வகையில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.  ஒரு வாரத்துக்கு முன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மார்ச் 7ல், 10ம் வகுப்புக்கு கணித தேர்வு நடந்தது; அதிகபட்சமாக 19 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் தேர்வுக்கு முன் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் போலியான வினா தாள்களை 'லீக்' செய்து மாணவர்களையும் பெற்றோரையும் ஒரு கும்பல் குழப்பி வருகிறது.

அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க டில்லி போலீசில் இன்னொரு புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே தேர்வுகள் முடியும் வரை மாணவர்களும் பெற்றோரும் தேவையற்ற வதந்திகளுக்கு இடம் தர வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.