அரசு பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
விளையாட்டு வீரர்களுக்கு எதிர்காலத்தில் வேலை உத்தரவாதத்தை ஏற்படுத்தும் வகையில் 1,000 விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, தனியார் கல்லூரிகளில் படிக்க வைக்க ஏற்பாடுசெய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
2018-19-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குதல் மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.விழாவுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, விளையாட்டுத் துறை செயலர் தீரஜ்குமார், உறுப்பினர் செயலர் சந்திரசேகரசகாமுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 37 வீரர்களை சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் திட்டத்தில் சேர்ப்பதற்கான ஆணையையும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 566 வீரர்களுக்கு ரூ.4 கோடியே 24 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர் களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 விளையாட்டு வீரர்களை திறமை அடிப்படையில் தேர்வு செய்து,30 தனியார் கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வரும் கல்வியாண்டு முதல், அவர்களுக்கு உயர் கல்வியுடன், உரிய விளையாட்டுப் பயிற்சியையும் வழங்கி, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.
தமிழகம் முழுவதும் 265 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க 5 முதல் 10 ஏக்கர் வரையிலான இடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டு, அவற்றில் முதல்கட்டமாக 100 பள்ளிகளில் நடப் பாண்டில் ஸ்டேடியத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விளையாட்டுத் துறையில் உள்ள பயிற்றுநர்கள் காலிப் பணியிடங்கள், தனியார் நிறுவனங்களின்சிஎஸ்ஆர் நிதி உதவியுடன் நியமிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
0 Comments