School Morning Prayer Activities - 11th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 11th March 2019

திருக்குறள் : 147

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

உரை:

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன், பிறனுக்கு உரிமையானவளின் பெண் தன்மையை விரும்பாதவனே.

பழமொழி:

Many a slip between the cup and the lip

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

பொன்மொழி:

ஒரு மனிதன் மிருகத்தைக் கொன்றால் அது வீரம். மிருகம் ஒரு மனிதனைக் கொன்றால் அது பயங்கரம்.

- பெர்னாட்ஷா

இரண்டொழுக்க பண்பாடு :

1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொது அறிவு :

1) காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?

ரோஸ்

2 தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?

லேண்ட் டார்ம்

நீதிக்கதை : விறகுவெட்டியும் வனதேவதையும் 

ஒரு ஊரில் ஒரு விறகுவெட்டி வாழ்ந்து வந்தான்.அவன் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய காடு இருந்து. அந்தக் காட்டில் நிறைய பெரிய பெரிய மரங்கள் வளர்ந்திருந்தன.

விறகுவெட்டி தினமும் அதிகாலையில் எழுந்து தன்னுடைய இரும்புக்கோடாலியை எடுத்துக் கொண்டு அந்தக் காட்டுக்குச் செல்வான். நன்றாகக் காய்ந்த மரமாகப் பார்த்து அதை வெட்டிக் கட்டாகக் கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஊருக்குள் சென்று விற்று வருவான். அந்தப் பணத்தில் அன்றுதேவையான உணவைத் தயாரித்து அவனும் அவன் மனைவியும்  உண்டு  வாழ்ந்து வந்தனர் .            

ஒருநாள் நல்ல வெய்யில் நேரம்.விறகுவெட்டி கோடாலியைத் தோளில் போட்டுக் கொண்டு அந்தக் காட்டுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். அவன் வெட்டுவதற்குத் தக்கபடி எந்தக் காய்ந்த மரமும் தென்படவில்லை.சூரியன் சையத் தொடங்கியது. தேடித் கொண்டே வந்தவன் அந்தக் காட்டின் நடுவே ஓடும் பெரிய ஆற்றின் கரைக்கு வந்து சேர்ந்தான்.

அந்த ஆற்றின் நீரை அள்ளிக் குடித்தான்.அந்த ஆற்றின் 
கரையில் ஒரு பெரிய மரம் இருந்தது அந்தமரத்தில்  இருந்த  பெரிய கிளையை வெட்டத்  தொடங்கினான்.

பாதிக் கிளையை வெட்டியபோது திடீரென்று அவன் கோடாலி கைநழுவி வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்தது.விறகுவெட்டி ஐயோ என அலறியவாறு நீருக்குள் இறங்கித் தேடினான். அவனுடைய கோடாலி அகப்படவே இல்லை.

என்ன செய்வான் பாவம் அங்கேயே அழுதபடி அமர்ந்து விட்டான்.வெகுநேரம் அவன் அழுது கொண்டிருப்பதை அந்தக் காட்டில் இருக்கும் வனதேவதை பார்த்தது.நீரில் இருந்து வெளியே வந்தது.வனதேவதையைப் பார்த்தவுடன் பயத்துடன் எழுந்து நின்றான்.அவனை அன்புடன் பார்த்த வனதேவதை,
"ஏனப்பா வெகு நேரமாக அழுது கொண்டிருக்கிறாய்? "என்று கேட்டது.
விறகுவெட்டியும் அழுதுகொண்டே "என் கோடாலி நீருக்குள் விழுந்துவிட்டது.அது இல்லாமல் என்னால் விறகு வெட்ட முடியாது.

இனி நான் எப்படி வாழ்வேன்?"என்றான் 
அதைக் கேட்ட வனதேவதை "கவலைப் படாதே உனக்கு கோடாலிதானே வேண்டும் நான் தருகிறேன்" என்று சொல்லி நீருக்குள் மறைந்தது.
சற்று நேரத்தில் அந்தவனதேவதை ஒரு தங்கக்  கோடாலியைக கையில் பிடித்தபடி வெளியே வந்தது.

"இதோ உன் கோடாலி.இதை வைத்துக் கொள் "

விறகுவெட்டி தன தலையை இல்லை என்பதுபோல் அசைத்தான்.
"இது பொன்னால் ஆனது இதைவைத்து விறகு வெட்ட முடியாது.
மேலும் இது என்னுடையது இல்லை."

என்று சொன்னவன் மீண்டும் அழத்  தொடங்கினான்.
"அழாதே  இரு இதோ வருகிறேன்" என்ற வனதேவதை மீண்டும் நீருக்குள் மூழ்கியது.

சற்று நேரத்தில் வெள்ளியாலான கோடாலியைப் பிடித்தபடி வந்தது.அதையும் பார்த்த விறகுவெட்டி "இதுவும் என்னுடையது இல்லை."என்றபடி தலையை அசைத்தான்.

"கவலைப் படாதே இதோ வருகிறேன் அழாமல் இரு என்று சொல்லியபடியே வனதேவதை நீருக்குள் மூழ்கி எழுந்தது.
இப்போது அதன் கையில் ஒரு இரும்புக்கு கோடாலி இருந்தது.
அதைப் பார்த்த விறகுவெட்டி  "இதுதான் என் கோடாலி." என்று மகிழ்ச்சியுடன்  கூறினான்.

வனதேவதையும் அவனைப் பார்த்து,"உன்னுடைய நேர்மையைப் பாராட்டுகிறேன்.நீ பிறர் பொருளுக்கு ஆசைப்  படாமல் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்."என்று கூறியபடி மூன்று கோடாலிகளையும் அவனிடம் கொடுத்தது.

"உன் நேர்மையைப் பாராட்டி இந்த மூன்று கோடாலிகளையும் உனக்குப் பரிசாக அளிக்கிறேன்.தங்கம் வெள்ளிக் கோடாலிகளை விற்று நீ செல்வந்தனாக வாழ்வாயாக.உனக்கு என் நல்வாழ்த்துக்கள்."என்று கூறி மறைந்தது.

நேர்மைக்கு கிடைத்த பரிசுகளை ப்  பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு நோக்கி நடந்தான் விறகுவெட்டி.

இன்றைய செய்தி துளிகள் : 

1)  17வது மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் ஒரே கட்டமாக நடைபெறும்.

2) தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின் போது 5 நாட்கள் தொடர் விடுமுறை

3) மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

4) அரசு ஊழியர்கள், தங்கள் வீடுகளில் நடக்கும் விழாக்களில், உறவினர்களிடமிருந்து பெறும் பரிசுப் பொருட்களுக்கு, கட்டுப்பாடு!

5) இந்தியா சார்பில்  விளையாடும் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வன்  பிஎன்பி பாரீஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அடுத்தடுத்து 3 சுற்றுகளில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.