School Morning Prayer Activities - 20th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 20th March 2019

திருக்குறள் : 154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.

உரை:

நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.

பழமொழி:

Mother and Motherland are greater than heaven

தாயும், தாய் நாடும் சொர்கத்தை விடச் சிறந்தவை

பொன்மொழி:

அறிவுத் தேவையை விட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.

- சர்ச்சில்

இரண்டொழுக்க பண்பாடு :

1) எனது உணவு விவசாயி, பாதுகாப்பவர், விற்பவர் மற்றும் சமைப்பவர் உழைப்பில் வருகிறது.

2) எனவே உலகில் உணவு  இல்லாமல் நிறைய பேர் இருக்கும் போது உணவை வீணாக்க மாட்டேன்.

பொது அறிவு :

1) வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?

ஆறுகள்

2) விவசாய உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் மாநிலம் எது ?

பஞ்சாப்

நீதிக்கதை :

கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது.

சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே “சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?” என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் “ஆம்!” என்றான்.

தேவதை “சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது,

சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி “இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான்.

சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. “என்ன… இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே” என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான்.

சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. “சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான்.

காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. “அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான்.

அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி “சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்” என்று நினைத்தான்.

தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான்.

சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான்.

தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது.

இன்றைய செய்தி துளிகள் : 

1) பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களில் மாற்றம் - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

2) புதிய கல்வி கொள்கை தயார் மத்திய அமைச்சர் அறிவிப்பு

3) நாடாளுமன்ற தேர்தல்: தமிழகம் முழுவதும் நேற்று 20 பேர் வேட்புமனு தாக்கல்...தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்

4) அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்

5) ஒப்பந்தப்படி உலககோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்: ஐசிசி தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன்