School Morning Prayer Activities - 4th March 2019

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 4th March 2019

திருக்குறள் : 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை 
நின்றாரின் பேதையார் இல்.

உரை:

அறத்தை விட்டுத் தீநெறியில் நின்றவர் எல்லாரிலும் பிறன் மனைவியை விரும்பி அவனுடைய வாயிலில் சென்று நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

பழமொழி:

Least said, sooner mended

யாகாவாராயினும் நாகாக்க

பொன்மொழி:

இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.

- மகாகவி பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன்  எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.

பொது அறிவு :

1) பெரு நாட்டின் நாணயம் எது ?

இன்டி.

2) இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?

நிக்கல்

நீதிக்கதை :

அன்று காலை, அக்பரைப் பார்த்த உடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரை சவாரிக்கேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார்.

அக்பர் அன்று வேட்டையாடத் திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார்.

சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல்.
 “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர்.

“தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல்.

சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.
திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.

அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல்.
“அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல்.

தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர்.
“அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது.

அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல்.
பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர்.
பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர்.
“சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்களற்ற காடுகளை வரதட்சணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.


இன்றைய செய்தி துளிகள் : 

1) பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்காத போதும் பிளஸ் 1-ல் தேர்ச்சி பெறாதவர்கள்நேரடியாக பிளஸ் 2 எழுத சலுகை: தேர்வுத்துறை அறிவிப்பு

2) ஆசிரியர் பயிற்சி தேர்வு எழுதியவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7ம்தேதி கடைசி நாள்!

3) பொதுத்தேர்வின் போது வினாத்தாள் முறைகேடுகளை தடுக்க புதிய செயலி சி.பி.எஸ்.இ.நிர்வாகம் அறிமுகம் செய்தது

4) 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

5) முதல் ஒரு நாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா