School Morning Prayer Activities - 8th March 2019
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:- 8th March 2019
திருக்குறள் : 146
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
உரை:
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
பழமொழி:
Make the best of bad job
எரிகிற வீட்டில் பிடிங்கின வரை லாபம்
பொன்மொழி:
கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.
-பிராங்க்ளின்
இரண்டொழுக்க பண்பாடு :
1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.
2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.
பொது அறிவு :
1) கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
யூரி
2) வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
சிக்ஸ்
நீதிக்கதை :
தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.
மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.
மறுநாள், வேலைக்காரன் ரொட்டிக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.
பெரிய ரொட்டியை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.
இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த ரொட்டியை பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.
எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் வாழ்வில் பல நன்மைகளை பெறலாம்.
இன்றைய செய்தி துளிகள் :
1) தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்
2) தமிழகத்தில் உள்ள, டிப்ளமா நர்சிங் படிப்புகளை, டிகிரி படிப்புகளாக மாற்ற, மருத்துவ கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது.
3) நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து முதன்முறையாக 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகளுக்கு கலெக்டர் ஷில்பா பரிசு - தனது காரில் ஏற்றி வந்து ஊக்கப்படுத்தினார்
4) ஆந்திரா முதல் கன்னியாகுமரி வரை மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
5) இந்திய மகளிர் டி20 அணியை மீண்டும் வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து அணி!
0 Comments