TET தவிர்த்து அனைத்து தேர்வுகளும் இனி ஆன்லைன் வழியில் நடைபெறும் : ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு, முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி தேர்வு(தற்போது வட்டார கல்வி அதிகாரி தேர்வு), சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் தேர்வுமுறை தற்போது மாற்றப்பட்டுள்ள நிலையில், தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு புதிதாக போட்டித்தேர்வையும் தேர்வு வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலிடெக்னிக்தேர்விலும் அதற்கு முன்பு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்விலும் மதிப்பெண் குளறுபடி மற்றும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், எவ்வித புகாருக்கும் இடம் தராமல் தேர்வுகளை நடத்தவும், தாமதம் இன்றி தேர்வு முடிவுகளை வெளியிடவும் ஆன்லைன்வழி தேர்வுக்கு மாற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்தது.
முன்பு ஒவ்வொரு தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள், காகித வழியில் பெறப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத்தப்பட்டது.இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள கணினி ஆசிரியர் தேர்வு முதல்முதலாக ஆன்லைன்வழியில் நடத்தப்பட உள்ளது. தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகள் கூறியது:
கணினி ஆசிரியர் தேர்வைத்தொடர்ந்துஅனைத்து தேர்வுகளையும் ஆன்லைன்வழியில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவுசெய்துள்ளது. இதற்கான பணிகள் இறுதி நிலையை எட்டியுள்ளன. எனினும் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதார்கள் விண்ணப்பிக்கும் தேர்வுகள் "ஓஎம்ஆர் ஷீட்" முறையிலேயே வழக்கம்போல் நடத்தப்படும்.காரணம் ‘டெட்’ எனப்படும் தகுதித்தேர்வுக்கு சாதாரணமாக 7 லட்சம் பேர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற நிலையில், இத்தேர்வை ஆன்லைன்வழியில் நடத்துவது சிரமமாக இருக்கும். பொதுவாக அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு, அரசு சட்டக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு, உதவி தொடக்கக் கல்வி அதிகாரி (தற்போது வட்டார கல்வி அலுவலர் தேர்வு), மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு, முதுநிலை விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு குறைந்தஎண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களே விண்ணப்பிப்பார்கள்.எனவே, இருக்கின்ற சூழலைப் பார்த்து குறைந்த எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் தேர்வுகளை ஆன்லைன் வழியாகவும்,‘டெட்’ தேர்வு போன்ற அதிக விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் தேர்வுகளை வழக்கம்போல் ‘ஓஎம்ஆர் ஷீட்’ முறையிலும் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், ஆன்லைன் தேர்வு முறையால்தேர்வு முடிவுகளை வெகுவிரைவாக ஒருசில வாரங்களிலேயே வெளியிட முடியும் என்றனர்.
0 Comments